#RainAlert | "ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு" - அமைச்சர் #RajaKannappan தகவல்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்.16) மற்றும் 17ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநாகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ எடையுள்ள 4000 ஆவின் பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் வகையில் 50,000 பால் பாக்கெட்டுகள் சோளிங்கநல்லூர் பால்பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.