இரவு 7 மணி வரை சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இரவு 7 மழை வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (அக்.13) வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை (அக். 14) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அது வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரவு 7 மணி வரை தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.