#RainAlert | மக்களே உஷார்... அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்தது. சென்னையில் இன்று காலை மழை கொட்டி தீர்த்தது. பின்னர் பிற்பகல் நேரத்தில் மழை நின்றதை அடுத்து வெயில் எட்டி பார்த்தது. இந்நிலையில், இன்று முதல் ஜன.1ம் தேதி தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.26) காலை 5.30 மணியளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணியளவில் மேலும் வழுவிழந்தது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், டிச.28 முதல் டிச.30ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனையடுத்து, டிச.31 மற்றும் ஜன.1ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.