#RainAlert | வெளுத்து வாங்க போகும் மழை... 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) உருவானது. இது அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனேக பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.18) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், 11 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.