#RainAlert | நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தென் தமிழகத்தில் நாளை மறுநாள் (செப். 28) முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் காற்றின் திசை வேறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக நாளை மறுநாள் (செப். 28) முதல் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வங்க கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, தமிழக கடற்கரையை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, செப்.28ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனால், தென் தமிழக மாவட்டங்களில் நாளையுடன் (செப்.27) அறுவடைப் பணிகளை நிறுத்திவிட்டு, அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும்.”
இவ்வாறு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.