#RainAlert | சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 25ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்திருந்தது. அந்த வகையில், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.