#RainAlert : அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த மூன்று நாட்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இதனால் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.