ரயிலுக்குள் மழை... அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!
ரயிலுக்குள் நீர்வீழ்ச்சியை வரவழைத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றிகள் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
பொதுவாகவே மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. அவ்வப்போது மழைகாலங்களில் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து பயணிக்கும் அவல காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். தற்போது லோகோ பைலட்டே ரயிலை குடைபிடித்து இயக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் இந்த வீடியோ காட்சிகள் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்தக் காட்சி ரயிலின் லோகோ பைலட் கேபினில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. லோகோ பைலட் ஒரு கையால் குடையைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ரயிலை இயக்கிக் கொண்டிருக்கிறார். ரயில்வேத்துறை அவரை பணியிடை நீக்கம் செய்யும் என்பதால் லோகோ பைலட்டின் முகம் காட்டப்படவில்லை. அவரது முகத்தை குடையால் மறைத்துக் கொண்டுள்ளார். அது எங்கு சென்ற ரயில், எந்த ரயில், ரயில் எண் எதையும் குறிப்பிடவில்லை.
இந்த வீடியோவை பகிர்ந்த நபர், “லோகோ பைலட் கேபினில் இருந்து அருவியின் இந்த அழகிய காட்சி” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிளிப் இதுவரை 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. பயனர்கள் பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் ஓட்டுநர்கள் ரயில்களை இயக்கினால் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், ரயிலுக்கு நீர்வீழ்ச்சியைக் காட்டிய ரயில்வேத்துறைக்கும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என நக்கலாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.