கனமழை எதிரொலி - நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக குற்றால அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது மரமுறிவு, நிலச்சரிவு, மின்சாரம் துண்டிக்கப்படுதல் என பல விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தந்நீரு உத்தரவிட்டுள்ளார்.