தொடரும் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் - விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ள சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் விழுப்புரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட 15மாவட்டங்களுக்கு இன்றும் லேசானது முதல் மிதமான மழை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு பணிகள் சீர் செய்யப்பட்டு வருவதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.