#RainAlert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு ?
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னையில் இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.