இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!
இணைய வாயிலாக பயணச்சீட்டு விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2020 - 2021-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வருவாயில் பெரும் சரிவைக் கண்ட இந்திய ரயில்வே இப்போது கடந்த ஆண்டுகளை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பயனாளர்கள் இணையவழிச் சேவையைப் பயன்படுத்தியிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 - 2015-ம் நிதியாண்டில் ரூ.20,621 கோடியாக இருந்த இணையவழி வருவாய் 2022 - 2023-ம் ஆண்டில் ரூ.54,313 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய இரயில்வே மற்றும் கேட்டரிங் கழகத்தின் செயலி மற்றும் இணையவழிச் சேவை இந்த வளர்ச்சியில் பெறும் பங்கு வகிக்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் 1.7 கோடி இணைய டிக்கெட்டுகள் வாயிலாக பயணிகள் பயணம் செய்த நிலையில் கடந்த நிதியாண்டில் (2022-2023) 4.3 கோடி இணைய டிக்கெட்டுகள் மூலம் பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய ரயில்வே துணை இராணுவப்படையினருக்கான இணையவழிச் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய ரயில்வே தற்போது ஏழு மத்திய துணை இராணுவப் படையினருக்கு தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தோ - திபெத் எல்லைக் காவல்துறையினருக்கான இணையவழி டிக்கெட் பதிவுத் தளத்தைக் கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.