ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு முதல் அரக்கோணம் வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதற்காக 3 மற்றும் 4வது ரயில் பாதை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பாதை அமைக்கப்பட்டாலும் தண்டவாள இணைப்பு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது. இந்த இணைப்பு பணிக்கு ரூபாய் 200 கோடி வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து தண்டவாள இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று ஜூலை 19ம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை 72 நாட்களுக்கு ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது.
குறிப்பாக நள்ளிரவு 12.15 முதல் அதிகாலை 2:15 மணி வரை பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்பாடியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயில்கள் தாமதமாக செல்லும். அதே போன்று வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 நாட்களுக்கு ரயில்கள் அதிகாலை நேரத்தில் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிகள் காரணமாக இன்று காலை மங்களூரு, காவேரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்களும் அரக்கோணத்தில் இருந்து ஒரு மணி நேர காலதாமத்தில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.