அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் அதிமுக கழக அமைப்புச் செயலாளராகவும், ராணிப்பேட்டை மாவட்ட தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் சந்தோஷ்குமார் மற்றும் விஜயகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : கரூர் அருகே பயங்கர விபத்து – சிறுமி உள்பட 4 பேர் உயிரிழப்பு!
இவரின் மகன் சந்தோஷ் குமார் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொரு மகனான விஜயகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று விடியற்காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அருள் பிரசாத் தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரனின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.