For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராகுல் காந்தியின் ‘இந்திய நீதி பயணம்’ - ஜன.14 மணிப்பூரில் தொடங்கும் என அறிவிப்பு!

01:39 PM Dec 27, 2023 IST | Web Editor
ராகுல் காந்தியின் ‘இந்திய நீதி பயணம்’   ஜன 14 மணிப்பூரில் தொடங்கும் என அறிவிப்பு
Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணமான இந்திய நீதி பயணம் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி கேரளா, ஆந்திரா,  தெலங்கானா,  மகாராஷ்டிரம்,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  டெல்லி, ஹரியாணா,  ஹிமாச்சல்,  டெல்லி வழியாக ஜம்மு-காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டார்.  நாடு முழுவதும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை இரண்டாம் கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணமான ‘இந்திய நீதி பயணம்’ ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பையில் மார்ச் 20-ஆம் தேதி முடிவடையும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

ஜனவரி 14-ம் தேதி இம்பாலில் தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி மும்பையில் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பயணம் நிறைவடைகிறது.  மணிப்பூர்,  நாகலாந்து,  அசாம்,  மேகாலயா, மேற்கு வங்கம்,  பீகார்,  ஜார்கண்ட்,  ஒடிசா,  சத்தீஸ்கர்,  உத்தரப் பிரதேசம்,  மத்தியப் பிரதேசம்,  குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்கள் வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பேருந்து மூலம் பயணம் மேற்கொண்டாலும்,  குறிப்பிட்ட இடங்களில் நடந்து சென்று மக்களை ராகுல் காந்தி சந்திப்பார்.  அனைவருக்கும் நீதி வேண்டும் என்ற குறிக்கோளை பிரதிபலிக்கும் நோக்கில்  ‘இந்திய நீதி பயணம்’  எனப் பெயரிடப்பட்டுள்ளது.”

இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறினார்.

Advertisement