அருணாச்சல பிரதேசம் சென்றடைந்த ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்'!
ராகுல் காந்தியின் 'இந்திய நீதிப் பயணம்' அருணாசல பிரதேசம் சென்றடைந்தது.
கன்னியாகுமரியில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் , டெல்லி வழியாக ஜம்மு-காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டார். நாடு முழுவதும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை இரண்டாம் கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணமான ‘இந்திய நீதி பயணம்’ ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் 'இந்திய நீதிப் பயணம்' அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது.
இதையும் படியுங்கள்: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலில் முதலமைச்சர் – மாஸ் காட்டிய ட்ரோன் ஷோ!
தொடர்ந்து ராகுல் காந்தியை, அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நபம் துகி வரவேற்றார். இரு மாநில மூத்த தலைவர்கள் முன்னிலையில் துகி மற்றும் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபென் போரா ஆகியோருக்கு இடையே கொடி ஒப்படைப்பு விழா நடைபெற்றது. பின்னர் ராகுல் காந்தி, மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றியை தெரிவித்தார். பின்னர் பாரம்பரியமிக்க நிஷி தலைப்பாகையுடன் டோய்முக் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.