For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RahulGandhi ப்ளீஸ் | சமந்தா விவகாரத்தில் அமலா கோரிக்கை!

02:01 PM Oct 04, 2024 IST | Web Editor
 rahulgandhi ப்ளீஸ்   சமந்தா விவகாரத்தில் அமலா கோரிக்கை
Advertisement

நடிகை சமந்தா விவாகரத்தில் கே.டி.ராமாராவை தொடர்புபடுத்தி காங் அமைச்சர் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் மாதிரி பேசு அரக்கி மாதிரி பேசாதே என சமந்தாவின் முன்னாள் மாமியார் அமலா அக்கினேனி விளாசியுள்ளார்.

Advertisement

ஆந்திராவில் திருப்பதி லட்டு சர்ச்சையைப் போல், தெலங்கானாவில் நடிகை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு என்ன காரணம் என்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து தெரிவித்த தெலங்கானா அமைச்சர் தற்போது பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அந்த அமைச்சர் மீது நாகர்ஜூனா தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமண வாழ்க்கையை தொடங்கினர். அவர்கள், 2021ஆம் ஆண்டு தங்களது பிரிவையும் அக்டோபர் மாதத்திலேயே அறிவித்தனர். தற்போது அவர்களது விவாகரத்து குறித்து மீண்டும் விவாதம் கிளம்பியிருப்பதும் இந்த அக்டோபர் மாதத்தில் தான். இந்த முறை விவாதத்தை கிளப்பியது தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா.

சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என அவர் போட்ட குண்டு, திருப்பதி லட்டு சர்ச்சையையே தூக்கி சாப்பிட்டுவிட்டது. மாதாப்பூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் அண்மையில் இடிக்கப்பட்டது.

இதனையடுத்து நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் பிரிவுக்கு காரணம் என்று அமைச்சர் கொண்டா சுரேகா குறிப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு நான்கு முனைகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. கே.டி. ராமாராவிடமிருந்து நோட்டீஸ் பறந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனாவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து நாகர்ஜூனாவின் மனைவி அமலா, ராகுல்காந்தியிடம் முறையிட்டார். “ஒரு பெண் அமைச்சர், அரசியல் யுத்தத்துக்கு எரிபொருளாக குடிமக்களை வேட்டையாடுவதை போல பேசுவதை கேட்டு உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது உண்மையிலேயே வெட்கக்கேடானது. தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?

ராகுல் காந்தி அவர்களே... நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பது உண்மையெனில், தயவுசெய்து உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்தி, இவ்விவகாரத்தில் எனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். உங்கள் அமைச்சரை, அவரது விஷமத்தனமான வார்த்தைகளை வாபஸ் பெறச் செய்யுங்கள்” என ராகுல்காந்தியை TAG செய்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கிடையே, “தன்னை சிறுமைப்படுத்தாதீர்கள் என்றும், எங்களது விவாகரத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை” என்றும் நடிகை சமந்தாவும் காட்டமாக தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து, அமைச்சரின் கருத்து கண்டனங்களை பதிவு செய்துள்ள நடிகர் நாக சைதன்யா, ”விவாகரத்து என்பது ஒருவரது வாழ்க்கையில் எடுக்கப்பட்ட வேதனையான முடிவுகளில் ஒன்று. எங்களது வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாக மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நாங்கள் எடுத்த முடிவு அது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி தொடங்கி அல்லு அர்ஜூன், நானி என பலரும் அமைச்சருக்கு எதிராக கண்டனங்களை குவிக்கத்தொடங்கினர். தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருவதையடுத்து, தான் பேசிய கருத்துகளை நிபந்தனையின்றி திரும்பப் பெறுவதாக அமைச்சர் கொண்டா சுரேகா நேற்று அறிவித்தார்.

கே. டி.ராமாராவ் குறித்து விமர்சிக்க வேண்டியிருந்ததாகவும், ஒரு குடும்பத்தை விமர்சிப்பது தனது நோக்கமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் பதிவை பார்த்த பின்னர், தனது கருத்து குறித்து மோசமாக உணர்ந்ததாக கூறி சினிமா வட்டார சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கொண்டா சுரேகா, அதே சமயம் கே.டி.ராமாராவ் குறித்த தமது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கூறி அரசியல் சர்ச்சைக்கு கமா போட்டுள்ளார்.

இந்தநிலையில், தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மந்திரி கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து இவ்விவகாரம், தற்போது ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் புயலை கிளப்பியுள்ளது.

Tags :
Advertisement