பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு!
இந்தியாவில் ஆண்டுக்கு 3 முறை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். அதன்படி, ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் உரை, பட்ஜெட் தாக்கல், நிதி மசோதா, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். பெரும்பாலும் இந்த கூட்டத்தொடர்களில் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்கள் இடம்பெறும்.
அதன்படி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கூட்டத்தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு, தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக நடந்துள்ளது. தலைமை தேர்தல், தகவல் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர்களை பிரதமர், ஒரு உயர்மட்ட அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்வு செய்யவேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இவர்கள் சந்தித்து இதுகுறித்து விவாதித்தனர். முன்னதாக தலைமை தகவல் ஆணையராக இருந்த ஹிராலால் சமாரியா கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது 2 ஆணையர்கள் மட்டுமே உள்ள சூழலில் உறுப்பினர்கள் பதவியிடமும் காலியாக உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்துதான் பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி, அமித் ஷா ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி ஆட்சேபங்களை தெரிவித்தாக தெரிகிறது.