#BoxOffice | 'தங்கலான்', 'டிமான்டி காலனி 2' படங்களை விட வசூலில் பின் தங்கிய 'ரகு தாத்தா'!
தங்கலான், டிமான்ட்டி காலனி, ரகு தாத்தா ஆகிய படங்களின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர தின வெளியீடாக விக்ரம் நடித்துள்ள தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி - 2, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரமுடன், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதேபோல நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டிமான்டி காலனி 2'. இத்திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரகு தாத்தா' இத்திரைப்படம் ஹிந்தித் திணிப்பு மற்றும் பெண் அடக்குமுறையைக் கேள்வி கேட்கும் வகையில் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படங்கள் வெளியான 2 நாட்களில் உலகளவில் ஈட்டிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' ரூ.53.64 கோடியும், 'டிமான்ட்டி காலனி - 2' ரூ. 10.5 கோடியும், 'ரகு தாத்தா' ரூ. 45 லட்சமும் வசூலித்துள்ளன.