நாவல் பழம் பறித்து தராததால் ஆத்திரம்... 4ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை!
நாவல் பழம் பறித்து தராததால், வகுப்பறைக்குள் பூட்டி வைத்து 4ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிஹாரிபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போத்திரம். அவரின் மனைவி பன்வதி. இவர்களின் 9 வயது மகன் பரேலியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 20ம் தேதி அந்த சிறுவன் உடம்பில் காயங்களுடன் வீடு திரும்பியுள்ளார். இதனை கவனித்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து அவனிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுவன் ஆசிரியர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் தாயாரான பன்வதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், "ஆசிரியை ராணி கங்வார் எனது மகனை மரத்தில் ஏறி நாவல் பழங்களை பறிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவன் மறுத்ததால், கதவுகளை பூட்டிவிட்டு வகுப்பறைக்குள் வைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவனை தாக்கியுள்ளார். இதனை எனது மகன் அழுதுக்கொண்டே கூறினான். நாங்கள் இந்த சம்பவம் குறித்து கிராமத்தில் தெரிவித்த போது சிலர் எங்களை சமரசம் செய்ய முயற்சித்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின் காயங்கள் உறுதிசெய்யப்பட்ட பின்னர், SC/ST சட்டத்தின்படி, 115 (2) மற்றும் 352 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, "மருத்துவப் பரிசோதனையில் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறோம். மற்ற ஊழியர்களிடம் பேசி சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ராணி, தான் நிரபராதி என்று கூறி வருகிறார்.