ஓடம்போக்கியாறு ஆக்கிரமிப்புகள் குறித்து கேள்வி : சமூக ஆர்வலரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நீர்வளத்துறை அதிகாரிகள்!
திருவாரூர் கொடிக்கால் தெரு பகுதியை சேர்ந்தவர் செம்புராயன் (63). இவர் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்க நகர செயலாளராக உள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தகவல் அறியும் ஊரிமைச் சட்டத்தில் தகவல் கோரி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட மாவட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தார்.
அதில், திருவாரூர் நகர் வழியாக செல்லும் ஓடம்போக்கி ஆற்றில் பழைய பஸ் ஸ்டாண்ட் தொடங்கி ரயில்வே கேட் மரணபாலம் வரையில் ஆற்றின் இருபுறமும்
உள்ள ஆக்கிரமிப்புகள், பொதுப்படித்துறைகள் எண்ணிக்கை, அதன் நீள அகலம்
குறித்து விளக்கமளிக்க கோரியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவரது வீட்டை தேடிசென்ற நீர்வளத்துறை
அதிகாரிகள் மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து நடவடிக்கைக்கோரி செம்புராயன் சிசிடிவி பதிவுகளுடன் போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளான அவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செம்புராயன் கூறியது,
சம்பவத்தன்று நான் வெளியூர் சென்று விட்டேன். வீட்டிலிருந்த எனது மனைவியை
மிரட்டி, உங்களை தொலைத்துவிடுவேன் என கூறி சென்றுள்ளனர். இதையடுத்து சிசிடிவி புட்டேஜ் சேகரித்து கடந்த 4ம் தேதி ஆன்லைன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இரண்டு முறை நகர காவல் நிலையத்திற்கு சென்று விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வீடு தேடி வந்து மிரட்டல் விடுத்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓடம்போக்கி ஆற்றில் உள்ள படித்துறை ஆக்கிரமிப்புகள் குறித்து கேள்வி கேட்ட காரணத்துக்காக நீர்வளத்துறை பாசனப்பிரிவு அதிகாரிகள் எனது குடும்பத்துக்கே மிரட்டல் விடுத்துள்ளனர்”. என்றார்.