வினாத்தாள் கசிவு - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!
நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில்107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று "இன்டஸ்ட்ரியல் லா" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இன்று திடீரென "இன்டஸ்ட்ரியல் லா" பாடத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது.
மேலும் வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். பல்கலைக்கழக தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.