#QuarterlyHoliday | மாணவர்களுக்கு குட் நியூஸ்... காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - எத்தனை நாட்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் நாளை மறுநாளுடன் (செப்.27) தேர்வுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது.
இந்த சூழலில், விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் என உள்ளதால் விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது,
"பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது."
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.