புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு இடையே புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவி கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரிநீர் விநாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது.
இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின்பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்குச் சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன அப்ரோன் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் எஃப்டிஎல்ஐ விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.
தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.