இடுப்பில் கட்டி இருந்த துண்டை தோளில் போடுவது, நாங்கள் போராடிப் பெற்ற உரிமை - தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சண்முகம்!
இடுப்பிலே கட்டி இருந்த துண்டை தோளில் போடுவதற்காக மூதாதையர்கள் நடத்திய போராட்டம், எதிர்கொண்ட பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, உயிர் தியாகம் காரணமாகத்தான் தோளிலே துண்டு ஏறியது என்பது வரலாறு என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான சண்முகம் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது,
“பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கில் ஆஜராவதற்கு சிவப்பு சால்வையை தோளில் அணிந்து கொண்டு சென்றிருந்தேன். முதலில் நமது வழக்கறிஞர் தோழர் என் உடன் வந்த மாவட்ட தோழர்களிடம் நீதிபதியிடம் வரும்போது தோழரை துண்டை எடுத்து விட சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் அவரிடத்தில் நாங்கள் சொல்ல முடியாது என்று கூறியதாக என்னிடத்தில் தெரிவித்தார்கள்.
பிறகு நீதிபதியின் அறைக்குள் சென்று நின்ற போது நீதிமன்ற பணியாளர் எனக்கு பின்னால் இருந்த தோழர்களிடம் சொல்லி தோளில் உள்ள துண்டை எடுக்குமாறு கூறினார். நான் எடுக்கவில்லை. ஆனால் மாஜிஸ்திரேட் என்னை பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. இடுப்பிலே கட்டி இருந்த துண்டை தோளில் போடுவதற்காக எங்களுடைய மூதாதையர்கள் நடத்திய போராட்டம், எதிர்கொண்ட பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, எல்லாவற்றிக்கும் மேலாக உயிர் தியாகம் இவற்றின் காரணமாகத்தான் தோளிலே துண்டு ஏறியது என்கிற வரலாற்று காவியத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
https://www.facebook.com/story.php?story_fbid=3640851199493758&id=100007067416815&mibextid=2JQ9oc
நீதிமன்றத்தில் தோளில் துண்டு அணியக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? விதிகள் ஏதாவது இருக்கிறதா? எதற்காக இப்படி துண்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. நீதிபதியே சொல்லி இருந்தாலும் நான் தோளிலிருந்து துண்டை அகற்றி இருக்க மாட்டேன். ஏனென்றால் அது நாங்கள் போராடிப் பெற்ற உரிமை. அதை ஒரு போதும் இழக்க முடியாது” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.