வசூலில் பின்னடைவை சந்திக்காத #Pushpa2 - வெளியான 25நாட்களில் இத்தனை கோடி வசூலா?
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 25நாட்கள் ஆன நிலையில் அதன் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் செய்யும் நபராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.
இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் அளவில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அதன் வசூலிலும் இப்படம் சாதனைகளை படைத்து வருகிறது. வெளியாகி மூன்றே நாளில் அதிகவேகமாக வசூல் சாதனை படைத்த பட்டியலில் இடம்பெற்றது. அதிலும் குறிப்பாக ஹிந்தி ரீமேக்கிலும் கல்கி படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான 14 நாட்களிலேயே ரூ.1508 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 25நாட்கள் ஆகியுள்ள படம் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'புஷ்பா 2' திரைப்படம் வெளியாகி 25 நாட்களில் உலகளவில் ரூ.1760 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையரங்க கூட்ட நெரிசல் மரணம், வழக்கு மற்றும் அல்லு அர்ஜுன் கைது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.