மாபெரும் மகா விகாஸ் அகாதி பேரணி என பகிரப்படும் 'புஷ்பா 2’ டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ? உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’
மும்பையில் நடைபெற்ற மாபெரும் மகா விகாஸ் அகாதி பேரணி என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
மும்பையின் பிகேசி மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் மகா விகாஸ் அகாதி பேரணியைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு பெரிய கூட்டத்தின் கண்கவர் ட்ரோன் ஷாட்டைக் காட்டுகிறது. சிலர் கோபுரம் போன்ற அமைப்பில் நிற்பதையும் காணலாம்.
இந்த வீடியோவை, ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர், "மும்பையில் BKC இல் MVA பேரணியில் கூட்டம் அலைமோதியது | ட்ரோன் மூலம் பதிவுசெய்யப்பட்ட சந்திப்பின் மேலோட்டம்" என பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், வைரலான வீடியோ நடிகர் அல்லு அர்ஜுனின் வரவிருக்கும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பாட்னாவின் காந்தி மைதானத்தில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தின் வீடியோ என இந்தியா டுடே ஃபேக்ட் செக் கண்டறிந்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
"புஷ்பா 2: தி ரூல்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோ என்று கூறி, பல ட்விட்டர் (எக்ஸ்) பயனர்கள் வைரலான பதிவிற்கு பதிலளித்தது கவனிக்கப்பட்டது.
இதுகுறித்து கூகுளில் முக்கிய தேடல் செய்தபோது இந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வைப் பற்றிய பல செய்தி அறிக்கைகள் கண்டறியப்பட்டன.
வைரலான வீடியோவைக் கொண்ட ட்விட்டர் (எக்ஸ்) பதிவு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த பதிவின்படி, “அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவைப் பார்க்க வந்த ரசிகர்களால் காந்தி மைதானம் முழுமையாக நிரம்பியிருந்தது” என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புஷ்பா 2: தி ரூல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தொடர்பான வீடியோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்த தேடுதலில், "புஷ்பா 2: தி ரூல்" இன் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான யூடியூப் சேனலான யூவே மீடியாவில் பதிவேற்றப்பட்ட 86 நிமிட நீளமான வீடியோ கண்டறியப்பட்டது.
இந்த வீடியோவின் பல கீஃப்ரேம்கள் வைரல் வீடியோவுடன் பொருந்துகின்றன. வைரல் வீடியோவைப் போலவே மேடையின் நெருக்கமான காட்சி 6:50 குறியில் தோன்றும். இதேபோல், 9:15 நிமிடங்களில், கோபுரம் போன்ற அமைப்பில் மக்கள் அமர்ந்திருப்பதைக் காணலாம். YouWe Media இன் YouTube சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவிற்கும், வைரலான வீடியோவிற்கும் உள்ள ஒப்பீட்டை கீழே காணலாம்.
செய்தி அறிக்கைகளின்படி, நவம்பர் 17 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் புஷ்பா 2: தி ரூலின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனாவைக் காண பெரும் கூட்டம் கூடியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நிகழ்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடிவு:
எனவே, வைரலான வீடியோ எந்த தேர்தல் பேரணியில் இருந்தும் அல்ல, பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற “புஷ்பா 2: தி ரூல்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘India Today’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.