Pushpa 2 கூட்ட நெரிசல் விவகாரம் - தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!
புஷ்பா திரைப்படத்தை காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கெனவே தாய் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.
இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருததுவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் டிச.13 அன்று கைது செய்யப்பட்டார். சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் அளித்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்பின்னர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கு சிறுவன் குறித்து எப்போதும் கவலையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த சிறுவன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு மூளைச் சாவு அடைந்ததாகவும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படம் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தை சார்ந்த தாயும் , குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.