#PurpleCap - 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன்.
இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார். 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 50 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வது இடத்திலும் உள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று 50வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3, நடராஜன் 2, கேப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வாலை துல்லியமான யார்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கிய தமிழக வீரர் நடராஜன் போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அந்த வகையில் 4 ஓவரில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு சீசனில் இதுவரை 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் நடராஜன்.
இதன்மூலம் 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நடராஜன் முதலிடம் பிடித்து, ஊதா தொப்பியை வென்றுள்ளார். பும்ரா, ஹர்ஷல் படேல், முஸ்தபிஷர் ரஹ்மான் ஆகியோர் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த சாதனையை படைத்த நடராஜன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். ஆனால் நடராஜன் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேர்வு செய்யப்படாதது குறிப்பிடதக்கது.