46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரிஜெகன்னாதர் பொக்கிஷ அறை - ஜூன்14ம் தேதி திறக்க ஒடிசா அரசு பரிந்துரை!
46ஆண்டுகளுக்கு பிறகு பூரிஜெகன்னாதர் பொக்கிஷ அறையை ஜூன்14ம் தேதி திறக்க ஒடிசா அரசு பரிந்துரை செய்துள்ளது.
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த உயர்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் மூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட உள்ளது.
பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கோயில் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கவுள்ளது. இதன்பின்னர் ஒடிசா மாநில அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரை செய்தது.
இந்த நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு பரிந்துரை வழங்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக விஷ்வநாத் ராத் தெரிவித்தார்.
இதன்படி பொக்கிஷ அறையின் மாதிரி சாவியை வருகிற 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை மாதிரி சாவியைக் கொண்டு அறையை திறக்க முடியவில்லை என்றால் பூட்டை உடைக்கவும் முடிவு செய்துள்ளோம்' என் விஷ்வநாத் ராத் தெரிவித்துள்ளார்.