புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை : குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
ஜெகந்நாதர் கோயிலில் இன்று நடைபெற்ற ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்தக் கோயிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர் சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
ஜெகநாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்காக ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. ரதங்கள் ஜெகநாதர் கோயிலின் சிம்ம வாசல் முன் நிறுத்தப்பட்டு, பூரி ஜெகன்நாதரின் தோட்ட வீடு என்றும் அழைக்கப்படும் குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 7) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.