புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படையாக போற்றப்படுகிறது. சூரனை வதம் செய்த திருத்தலம், தேவர்களை காத்தருளிய தலம், சுயம்புவாக தோன்றிய தலம் என பல வரலாறுகள் உள்ளதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிக அதிகம். ஆண்டின் அனைத்து நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கிறார்கள். திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்தால் எப்படிப்பட்ட கொடுமையான வினைகளும் நீங்கும், தலையெழுத்தே மாறும் என பக்தர்கள் நம்புவதால் இங்கு உலகின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், இன்று (அக். 15) புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர். மேலும், மடிப்பிச்சை எடுத்து கோயில் உண்டியலில் செலுத்தி மனமுருகி வழிபட்டனர். சுமார் 6 அடி வேல்களை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.