புரட்டாசி 2வது சனிக்கிழமை - #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள்தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய சனிக்கிழமை ஏகாதசி திதியுடன் இணைந்து வருகிறது. அதனால் இன்றைய தினம் பெருமாளுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று காலை முதலே பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள புறநகர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பார்த்தசாரதி ஆலயம் நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர். துளசி இலை மாலையை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு வருகின்றனர்.
பார்த்தசாரதி கோயிலை பொறுத்தவரை நூறு ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் என இருவகையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தனி தனியே பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.