தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு - திமுகவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆதரவு!
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைத்தால், அது மக்கள்தொகையை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்கும் என்றும், இதனால் மக்களவையில் அந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிசா மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் முதலமைச்சர் பகவந்த் மான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். திமுக குழுவினர் என்னைச் சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள்தொகை குறைவாக உள்ளதால், தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.
இது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக மத்திய அரசு செய்லபடுவதை சுட்டிக்காட்டுகிறது. தொகுதி மறுசீரமைப்பு மூலம், பாஜக வெற்றி பெறாத இடங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைக்க அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு பஞ்சாப் அரசு சார்பில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் பணியைத் தொடர்ந்து பஞ்சாபில் எவ்வளவு தொகுதிகள் கூடும், குறையும் என்பது தெரியவரும்" என்று கூறியுள்ளார்.