புனே: பிரபல சுற்றுலா தளத்தில் உள்ள பாலம் இடிந்து விபத்து!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ள குண்ட்மலா பகுதியில் ஓடும் இந்திராயானி ஆற்றின்குறுக்கே 30 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் உள்ளது. இந்த இரும்பு பாலத்தில் இன்று(ஜூன்.15) ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடி பாலத்தில் இருந்தவாறு ஆற்றை பார்வையிட்டுள்ளனர். அந்த நேரத்தில் தீடீரென பாலம் இடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி ஒருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தலேகான் தபாதே காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, “இதுவரை ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அப்பகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், “பாலத்தில் சுமார் 100 பேர் இருந்தனர். சிலர் கீழே விழுந்தனர், ஆனால் பத்திரமாக கரைக்கு திரும்பினர்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, “பாலத்தில் இருந்த சில பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
புனே மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன், அவர் தேவையான அனைத்து உதவிகளையும் அனுப்பி வருகிறார். மழைக்காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.