புதுக்கோட்டை பட்டாசு வெடி விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதுக்கோட்டை அத்திப்பள்ளம் பகுதியில் தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம் கிராமத்தில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கான குடோன் கடையின் பின்புறமே உள்ளது. இந்நிலையில் கடையை விரிவு படுத்துவதற்காக வேல்முருகன் வெல்டிங் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்காக ஊழியர்கள் கார்த்திக் ராஜா, சிவனேசன் ஆகியோர் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெல்டிங் தீப்பொறி பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் மீது பட்டு வெடிகள் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கார்த்திக் ராஜா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவனேசன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் கார்த்திக்ராஜாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம். அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.