புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!
சென்னை தனியார் கல்லூரியில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்கிற வாலிபர் தனது பிறந்தநாளை கொண்டாட புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவரது நண்பர்கள் 15க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் அனைவரும் புதுச்சேரி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள ரெஸ்டோ பார்க்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பாரில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதால் மற்ற வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியே அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் அங்கிருந்த பவுன்சர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தங்களை ஏன் வெளியேற்றுனீர்கள் என பவுன்சர் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் மோதி கொண்டுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியர் அசோக் ராஜ் என்பவர் அதிகாலை 1:30 மணியளவில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து பாரின் கீழே இருந்த மோஷிக் சண்முக பிரியனை கத்தியால் முதுகில் குத்தி உள்ளார். இதனை தட்டி கேட்ட ஷாஜனையும் இடுப்பில் குத்தி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முக பிரியன் உயிரழ்ந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர்.
அதேபோல் ஷாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து கொலையில் தொடர்புடையதாக அசோக் ராஜ், பவுன்சர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், மற்றும் எஸ்.பிக்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கொலை நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இரவு 12 மணியுடன் ரெஸ்டோ பார்கள் மூட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்படுள்ள நிலையில் விதியை மீறி அதிகாலை 3 மணி வரை நடனத்துடன் ரெஸ்டோ பார்கள் இயங்கி வருவதால் தான் இச்சம்பவம்
நடைபெற்றிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.