புதுச்சேரி to வடபழனி : 2மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட உடலுறுப்பு - வெற்றிகரமாக உறுப்புமாற்று சிகிச்சை செய்த காவேரி மருத்துவமனை.!
புதுச்சேரியிலிருந்து 2மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட உடலுறுப்பை வடபழனி காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக உறுப்புமாற்று சிகிச்சை செய்து சாதித்துள்ளது.
மானுடத்தின் கனிவுக்கும், கருணைக்கும் தாராள மனதுக்கும் ஒருபோதும் அழிவில்லை. அத்தகையதொரு அறச்சிந்தனையின் அடிப்படையில் 43 வயதான ஒரு பெண்மணி, தனது உறுப்புதானத்தின் வழியாக முகம் தெரியாத வேறொரு நபருக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க அரிதான ஒரு வாய்ப்பை அவர் வழங்கியிருக்கிறார்.
இருபக்க நுரையீரல்களும் மாற்றப்பட்டிருக்கும் இந்த வெற்றிகர உறுப்புமாற்று சிகிச்சை, நுரையீரல் உறுப்புமாற்று செயல்பாட்டில் வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் நிபுணத்துவத்தை வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது. காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் பிற மருத்துவமனைகளில் பல்வேறு உடலுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கும் சிறப்பான வரலாறு இருக்கின்ற நிலையில், வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் இன்று நடந்திருக்கும் நிகழ்வு, இங்கு செய்யப்பட்டுள்ள முதல் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை என்ற பெருமையை பெறுகிறது.
உறுப்புதானம் என்ற மிக உயர்ந்த தானத்தின் வழியாகவும் மற்றும் பல்வேறு தரப்பினரின் சிறப்பான ஒத்துழைப்பின் வழியாகவும் நீண்டகாலம் காத்திருந்த இந்த நோயாளிக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உறுப்பு தானமளித்த பெண்மணியின் குடும்பத்தினரது தர்ம சிந்தனையும், தாராள மனதும், மனிதநேயத்தின் அழகையும் மற்றும் உறுப்புதானம் அளிப்பதனால் கிடைக்கும் பயனையும் நம் அனைவருக்கும் மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டி உறுப்புதானத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.