புதுச்சேரியில் 3-வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர் - பொதுமக்கள் அச்சம்!
புதுச்சேரியில் கடல் நீர் 3-வது முறையாக செந்நிறத்தில் மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி தலைமைச்செயலகம் எதிரில் உள்ள கடற்கரை பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் செந்நிறமாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுவரை கடல்நீர் 2 முறை சிகப்பு நிறமாக மாறிய நிலையில், இன்று 3வது முறையாக மீண்டும் கடல்நீர் செந்நிறமாக மாறியுள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல கடல் நீர் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்ரீநிவாசன் கடந்த வாரம் கடல் நீரின் மாதிரிதை ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.
அந்த ஆய்வில் அவர் கூறியிருப்பாவது, “புதுச்சேரியில் வந்திருக்கக் கூடியது அலெக்ஸாண்ட்ரியம் என்ற ஒரு வகை பேரினம் ஆகும். இதில் 2 வகையான சிற்றினம் உள்ளது. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுப்படிக்கப்பட்டது, அப்போது மிகவும் குறைந்த அளவில் இருந்த இந்த வகை கடல்பாசி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புதுச்சேரியில் வந்துள்ளது.
தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக இந்த வகை கடல் பாசி ஏற்பட்டுள்ளது. இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த கடல்பாசி நீண்ட நாள் இருக்கும் பட்சத்தில் கடலில் இருக்கும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதோடு, அந்த உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அலெக்ஸாண்ட்ரியம் கடல்பாசி ஆபத்தானது.
இதற்கு தீர்வாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக பராமரித்து கடலில் கலக்கச் செய்ய வேண்டும். கடல் நீரை சுத்தம் செய்வதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இன்னும் இல்லாத நிலையில், இந்த வகையான கடல்பாசிகளை வருவதற்கு முன்பாகவே தடுப்பது தான் நல்லது. ஒரு லிட்டர் கடல் நீரில் 2 லட்சம் நுன்னுயிர்கள் இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது”. இவ்வாறு ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் ஈடுபாட்டைப் பார்த்து பயந்தேன்: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!
இதனிடையே கடல்நீரின் மாதிரிகளை சென்னை கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு
புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் முடிவுகள் மற்ரூம் பாதிப்புகள் குறித்தும் அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்காத நிலையில் இன்று
3வது முறையாக கடல் நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து புதுச்சேரி அரசு வெளிப்படையாக பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.