பெட்ரோல் விலை உயர்வு - ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் புதுச்சேரி எல்லைப்பிள்ளச்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து புதுச்சேரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கச்சா எண்ணெய் விலை உயராமல் பெட்ரோல் எப்படி உயர்த்தப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர்கள் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றும் புதுச்சேரியில் மட்டும் விலை உயர்த்தப்படுவதை ஏன் என கேள்வி எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.