புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !
புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5வது பிரிவுக் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 15வது புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 6வது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
அப்போது காகிதமில்லா பட்ஜெட் கூட்டமாக நடைபெற்ற நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சுமார் 55 நிமிடங்கள் உரையை வாசித்தார். இதனை தொடர்ந்து பேரவையை நாளை (11.03.2025) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.
இதனிடையே நாளை (மார்ச்.11) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 2025-26ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை வரும் மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும் தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தமிழில் வாசித்த மூன்றாவது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் என்பது குறிப்பிடத்தக்கது.