#Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும், அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்றுமுன் தினம் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். (ஆக. 17) காலை 6 மணி முதல் நேற்று (ஆக. 18) காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : “கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன்” – உருவ கேலி செய்த #DonaldTrump
இந்நிலையில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்நிலையில் நேற்று ( ஆக்ஸ்ட் - 18ம் தேதி) போராட்டம் ஜிப்மரில் தொடர்ந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 8 - 10 மணிவரை மட்டுமே இயங்கும் எனவும் அவசரமற்ற, நீண்டகால நோய்க்காக சிகிச்சை பெறுவோர் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்கவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டோர் “We want justice #RGkar” என்ற வடிவில் நின்று வலியுறுத்தினர்.