புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் திரைப்பட விழா!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு உள்ளிட்ட 10 மொழிகளை சார்ந்த 30 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் திரைப்பட திருவிழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு தொடங்கி வைத்தார். மின்னணு ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் ராதிகா கண்ணா, பேராசிரியர்கள் முத்தமிழ், அருள்செல்வன் மற்றும் ஊடகத்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்ச் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளை சார்ந்த 30 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாள திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றவுள்ளார். இந்த விழாவில் குறும்படம் மற்றும் புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
சினிமா மற்றும் திரையரங்கம் இனம், மொழி கடந்து மக்களை ஒன்றுசேர்க்கும் கலையாக இருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து "சினிமா அனைவருக்குமானது" என்ற அடிப்படையில் இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. மேலும் நல்ல சினிமாவை பார்ப்பதற்கும் அதை பற்றிய உரையாடலை தொடங்கவும் இந்த திரைப்பட விழா உதவும் என்கின்றனர் புதுச்சேரி பல்கலைக்கழக திரைப்பட திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்.