ராமர் சிலை பிரதிஷ்டை விழா: ஊடகங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு பற்றிய தவறான தகவல்களை ஊடகங்கள், சமூக ஊடக தளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ராமருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
இதையும் படியுங்கள் : கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கத்தை வென்றது தமிழ்நாடு அணி!
இதையடுத்து, 22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
ராமர் சிலை பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பான தவறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.