'ரூ.4000 கோடி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்' - தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
நான் வெள்ளை அறிக்கை கேட்டால் கோபித்து கொள்கிறீர்கள், 2015-ல் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கவில்லையா? அதே போல் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என பலரும் மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, போர்வை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
கடல், உபரிநீரை உள்வாங்கவில்லை என்னும் பதிலை கனிமொழி அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. மக்களை பற்றியோ மக்களின் வாழ்வாதாரங்களை பற்றியோ கவலைப்படும் அரசாங்கத்தை நாம் நிறுவவில்லை. 1967 முதல் இன்று வரை இந்த திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவே மாறி மாறி ஆட்சி செய்கின்றன.
மழைநீரோ, கழிவு நீரோ வடிந்து செல்ல முறையான வடிகால் இல்லை. சென்னையே ஒரு ஏரி நகரம். ஏரியை ஏரியாவாக்கினால் என்ன செய்ய இயலும். அடிப்படை கட்டமைப்பே இல்லாமல் இருக்கும்பொழுது இது எப்படி தலைநகராகும்.
நான் வெள்ளை அறிக்கை கேட்டால் கோபித்து கொள்கிறீர்கள், 2015 ல் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கவில்லையா? ரூ.4000 கோடி செலவு செய்தது குறித்த விவரங்களை வெளியிடுங்கள். நீங்கள் நீர் தேங்காத பகுதிகளில் குடியேறினால், மற்ற மக்களின் நிலை?
ஆட்சியாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், வாக்களார்களும் நேர்மையாக இருக்க வேண்டும். துன்பங்களை தருபவர்களுக்கே அதிகாரங்களை கொடுத்தால் துன்பம் தொடராத்தான் செய்யும். மாற்று சிந்தனை மக்களிடத்தில் வர வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கும் போது, ஜிஎஸ்டிக்கு எதிராக ஒரு போராட்டம் செய்ய வேண்டும். எண்ணெய் நிறவனங்களோ மற்ற நிறுவனங்களோ அனைவருக்கும் வேலை என்று சொல்லியே கொண்டுவரப்பட்டது. மனித உணவுத்தேவையில் 33 சதவீதம் கடல் உணவே பூர்த்தி செய்கின்றன. அதையும் நஞ்சாக்கினால் என்ன செய்வது?
இவ்வாறு அவர் கூறினார்.