வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு - கட்டுமான பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்!
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர் வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள். அவர் அமைத்த வள்ளலார் தெய்வ நிலையம் கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் ஞானசபை அருகே சுமார் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனிடையே அந்த பகுதியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர் சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி தமிழ்நாடு அரசு கட்டுமான பணியை தொடங்கியது. இந்த நிலையில் ஞானசபை அருகே கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.