#TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… "பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்" - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்ப்பிணிகள் பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர பொது சுகாதாரம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கனமழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
" பருவகால மழை மற்றும் புயல் காலங்களில் கர்ப்பிணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை கண்டறிந்து முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : RainUpdates | கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அவ்வாறாக, பிரசவ தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணிகள் கடந்த 15ம் தேதியும், 3,314 கர்ப்பிணிகள் 16ம் தேதியும் முன்கூட்டியே பாதுகாப்பு கருதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.