விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட பொதுமக்கள் - போக்குவரத்து மாற்றம்!
மறைந்த தேமுதிக தலைவர் 'கேப்டன்' விஜயகாந்த்-ன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காயிதே மில்லத் பாலம் - ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அந்த அறிவிப்பின்படி,
- அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும்.
- மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணாசாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.
- தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும். மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
- அனைத்து இலகு ரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
- தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.