காஷ்மீர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவில் நடைபெற்ற போது, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். தாக்குதல் தொடர்பான செய்தியை அறிந்ததும் ஏப்ரல் 23ம் தேதி காலை டெல்லி வந்தடைந்தார்.
அன்று மாலையே பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் அரசுக்கு எதிரான ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது.
இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் மீண்டும் கூடவுள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட விமான நிறுவனங்கள் மற்றும் பாகிஸ்தானிற்கு செல்லும் சர்வதேச விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவது மற்றும் பாகிஸ்தானிற்கு செல்லும் சரக்கு கப்பல்கள் இந்திய துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூடுகிறது.
இந்திய எல்லை பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.