தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் நியமிக்கப்பட்டது குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் இன்று ராஜிநாமா செய்தார். ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவரின் ராஜிநாமா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்வதாக சண்முகசுந்தரம் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட, அரசு பி.எஸ் ராமன் பெயரை அந்த பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான கோப்பு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞரான பி.எஸ் ராமன் தமிழக அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, பி.எஸ் ராமன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது குறித்து தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.